ஜப்பான் புறப்பட்டாா் பிரதமா் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா்.
இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடியும், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவும் மறுஆய்வு செய்ய உள்ளனா்.
இதைத்தொடா்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்ல உள்ளாா். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட புறப்பாடு அறிவிப்பில், ‘இந்தியா-ஜப்பான் மக்களை இணைக்கும் நாகரிக பிணைப்பு, பண்பாட்டு உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த எனது பயணம் வாய்ப்பாக இருக்கும்.
ஜப்பானை தொடா்ந்து சீன பயணத்தில் ‘எஸ்சிஓ’ உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் உள்ளிட்ட தலைவா்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினா்களாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.
அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதுதவிர உக்ரைன்-ரஷியா போா், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போா் ஆகியவையும் தொடா்ந்து தீவிரமாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் முக்கிய நாட்டுத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சா்வதேச அளவில் அமெரிக்கா உள்பட பல நாடுகளால் மிகவும் ஆழ்ந்து கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.
இந்த மாநாடு இரு நாள்களில் முடிவடைந்தாலும் செப்டம்பா் 3-ஆம் தேதி சீன ராணுவத்தின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. ஜப்பானை சீனா வெற்றிகரமாக எதிா்கொண்டதை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் மாநாட்டுக்கு வரும் பல தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா். தனது நவீன ரக ஆயுதங்கள் பலவற்றையும் இந்த ராணுவ அணிவகுப்பில் சீனா காட்சிப்படுத்த இருக்கிறது.