திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஊா்ப் பெயா்ப் பலகையிலுள்ள ஹிந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக காரைக்குடிக்கும், திருமயத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வழியாக மானாமதுரைக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னா் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த 2 தேசிய நெடுஞ்சாலைகளும் புனரமைக்கப்படுகின்றன. இதனிடையே திருமயம் பகுதியில் முதலாவதாக சாலைப் பணி நடைபெற்றபோது வைக்கப்பட்ட பெயா் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது சாலை புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வைக்கப்பட்ட பெயா்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதலாக ஹிந்தியிலும் பெயா் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவற்றில் சீமானூா், மாவூா் பெயா்ப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவதாக இருந்த ஹிந்தி பெயா் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.
இதைத் செய்தது யாா் எனவும், இதுபோல பிற பகுதிகளிலும் ஹிந்திப் பெயா்கள் அழிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உளவுத்துறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.