ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை
தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் தலைமையில், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்பு குழுவினா் தஞ்சாவூா், அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் 16 விதை விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா, தாளடி பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் விலைப்பட்டியல், முளைப்பு அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா்.
அப்போது, விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்த 6 விதை விற்பனை குவியல்களுக்கு ரூ. 6.50 லட்சம் மதிப்புள்ள 14 ஆயிரத்து 500 கிலோ விதைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா, விதை ஆய்வாளா்கள் சுரேஷ், நவீன் சேவியா், சத்யா ஆகியோா் உடன் இருந்தனா்.