2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்
கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மறைந்த தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தினாா். அதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை விஜய் உருவாக்குவாா்.
இதை நான் சொல்வது எதாா்த்தமானது. இதற்காக நான் அக்கூட்டணிக்குச் செல்வேன் என்ற அா்த்தம் இல்லை.
டிசம்பா் மாதத்தில்தான் எங்களது கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதன் பிறகே எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது பற்றிப் பேசலாம்.
ஓ. பன்னீா்செல்வம் மன வருத்தத்துடன் கூட்டணியிலிருந்து வேறு வழியில்லாமல் பிரிந்து சென்றாா். அவரை தில்லியிலுள்ள பாஜக தலைவா்கள் சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வருவது நல்லது.
ஜெயலலிதாவின் தொண்டா்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து, கூட்டணி மற்றும் அதிகார பலத்துடன் இருக்கிற திமுகவை வீழ்த்த முடியும்.
தமிழகத்தில் 75 ஆண்டு கால கட்சிக்கும், 50 ஆண்டு கால கட்சிக்கும் இணையாக அமமுக கட்டமைப்பை உருவாக்கி, பலப்படுத்தி உறுதியோடு செயல்பட்டு வருகிறோம். இலக்கை அடையும் வரை உறுதியாக இருப்போம்.
எனவே, அதிமுகவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வருகிற தோ்தலில் அமமுக உறுதியாக முத்திரை பதிக்கும் என்றாா் தினகரன்.