மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்
மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் முழுமை பெறும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
பெரம்பலூா் தனியாா் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: பெரம்பலூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு அரசுக் கல்லூரியையும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டதன் விளைவாக கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவா்களின் சோ்க்கை மிகக் குறைவாக இருந்த நிலையில் நிகழாண்டு அதிகரித்துள்ளது. மேலும் இடைநிற்றல் தடுப்பு நடவடிக்கையாலும் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூட 20 சதவீதம் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது உயா்கல்வித் துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய நற்சான்று.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் அரசு பொதுத் தோ்வுகள் எழுதுவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் தோ்வுகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தோ்ச்சி பெற்றவா்கள் சிலரே. ஆனால், தற்போது 100-க்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெறுகிறாா்கள். அதில், 70 சதவீதம் போ் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சோதனை முறையில் சில இடங்களில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணிகள் அடுத்த சில மாதங்களில் முழுமை பெறும் என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.