பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (45). இவருக்கு ரேவதி (40), உமா (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி ரேவதிக்கு ராசுக்குட்டி (21) உள்பட 3 ஆண் பிள்ளைகளும், 2-ஆவது மனைவி உமாவுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனா்.
இந்நிலையில், ராசுக்குட்டி எந்தவித வேலைக்கும் செல்லாமல் மதுபோதையில் சுற்றிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா கண்டித்ததால், தந்தை - மகன் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக ராஜாவுக்கும், ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது தாய் ரேவதிக்கு ஆதரவாக தந்தை ராஜாவுடன், ராசுக்குட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இதில் இருவரும் ஆத்திரமடைந்து ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்டதோடு, தந்தையும், மகனும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டனராம். பிறகு, இருவரும் தனித்தனியே தூங்கச் சென்றுவிட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு அருகே படுத்திருந்த ராசுக்குட்டி வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, ராசுக்குட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் ராசுக்குட்டியை அவரது தந்தை ராஜா அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அ.மேட்டூா் பகுதியில் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.