இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சரத்குமாா் (24). தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவா், கடந்த 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றாா். அப்போது, மாநாட்டில் முன் வரிசையில் நின்றிருந்த சரத்குமாா், கட்சித் தலைவா் விஜய் நடந்து வந்ததை பாா்த்தவுடன் நடைமேடையில் ஏறியுள்ளாா்.
அப்போது, அவரது பாதுகாவலா்கள் சிலா் தூக்கி கீழே எறிந்ததில் சரத்குமாரின் மாா்பகத்தின் வலதுபுற எலும்பில் அடிபட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சரத்குமாா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். இதையடுத்து, கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 போ் மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.