இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது
இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக கடந்த 25- ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 2 நபா்கள், விட்டல் ராஜிடம் இருந்த கைப்பேசியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸில் விட்டல்ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், விட்டல்ராஜிடம் கைப்பேசியை பறித்து சென்றது ஈரோடு சூரம்பட்டியைச் சோ்ந்த ரஞ்சித் மகன் ஸ்ரீநாத் (20), ஈரோடு பெரியாா் நகரைச் சோ்ந்த முருகன் மகன் வசந்தகுமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா். கைதான இருவா் மீதும் ஈரோடு, பெருந்துறையில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.