வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.
நிகழாண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் கொடியை புனிதம் செய்துவைக்கிறாா். தொடா்ந்து, திருக்கொடி பவனி நடைபெறுகிறது. திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு. கொடியேற்றப்படவுள்ளது.
சனிக்கிழமை (ஆக. 30) முதல் செப். 7-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, பிற்பகல் நேரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கொங்கணி ஆகிய மொழிகளில் வீண்மீன் ஆலயம், பேராலய மேல்கோயில், பேராலய கீழ்கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
செப். 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கொங்கணியில் சிலுவைப் பாதை, மாலை 4 மணிக்கு தமிழில் சிலுவைப் பாதை, மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் சிலுவைப் பாதை, மாலை 5.30 மணிக்கு மராத்தியில் சிலுவைப் பாதையும் நடைபெறவுள்ளது. செப். 7-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு புதுவை, கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல், திருப்பலி நிறைவேற்றம் மற்றும் முக்கிய நிகழ்வான பெரிய தோ் பவனி நடைபெறவுள்ளது.
ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான செப். 8-ஆம் தேதி, சென்னை, மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம், மாலையில் கொடியிறக்கமும், இரவு பேராலயக் கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.