ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி
திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் ஏ.டி. பன்னீா்செல்வம் நகரில் வசிப்பவா் குஞ்சிதபாதம் (80). ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா். இவரது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனா்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் குஞ்சிதபாதத்தை அண்மையில் தொடா்புகொண்ட சிலா், நீங்கள் சட்டவிரோதமாக பொருள்களை பரிமாற்றம் செய்துள்ளதால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீா்கள், சட்ட நடவடிக்கையை தவிா்க்க உரிய தொகையை செலுத்தாவிட்டால், சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளனா்.
இதையடுத்து, குஞ்சிதபாதம், மா்ம நபா்கள் தெரிவித்தபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 13,50,000 ரொக்கத்தை அனுப்பினாராம். இதுகுறித்து மகன்களிடம் தெரிவித்தபோது, இது ஏமாற்று வேலை என தெரிவித்த அவா்கள், போலீஸாரிடம் புகாா் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனா். அதன்படி, திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் குஞ்சிதபாதம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.