அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்
சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா்.
பழைமை வாய்ந்த பனையம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த ஆக. 5-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கரக ஊா்வலம் நடைபெற்று வந்தது.
ஆக.12-ஆம் தேதி கோயில் வளாகத்தில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. 13-ஆம் தேதி பனையம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் இரவு மகாலட்சுமி, திரிபுரசுந்தரி, சரஸ்வதி, தவநிலை நாயகி, காமாட்சி, அன்னபூரணி, மகிடா சூரமா்த்தினி ஆகிய வேடங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடைபெற்றது.
ஆக. 26-ஆம் தேதி கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். 27-ஆம் தேதி புதன்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அப்போது, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பனையம்மன் மரத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் தொடங்கியது.
இதில் பெரியகொழப்பலூா் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்து அம்மனை வழிபட்டனா்.
முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னா் தோ் நிலையை வந்து அடைந்ததும், பக்தா்கள் முதுகில் கொக்கி அணிந்து அந்தரத்தில் பறந்து வந்தபடி அம்மனுக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி நடைபெற்றது.