அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
‘Vote Chori’ Row : `வாக்குத் திருட்டும், ஜனநாயக பேராபத்தும்!' - கான்ஸ்டன்டைன் ரவிந்திரன் | களம் 03
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
"ஒரு தேர்தலின் முடிவை வாக்களிக்கும் வாக்காளர்கள் முடிவு செய்வதில்லை. மாறாக, வாக்குகளை எண்ணுபவர்களே...” என்ற முன்னாள் ரஷ்ய அதிபர் ஜோசஃப் ஸ்டாலின் அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தில்லு முல்லுகள் மெல்ல, மெல்ல அம்பலமாகி தெள்ளத் தெளிவாக உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சுதந்திர இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் விதமாக அன்றைய தேசிய தலைவர்களும், சட்ட வல்லுநர்களும் ஒன்றிணைந்து மக்கள் பிரதிநிதித்துவ நாடாளுமன்ற முறையை முன்மொழிந்து, அந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, மக்கள் பங்கேற்கும் வாக்குச் சீட்டு தேர்தல் முறையைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தேர்தலை செவ்வனே நடத்திடும் உன்னதமான நோக்கில், அரசியலமைப்பு சட்டத்தின் 324, 329 பிரிவுகளின்படி தேர்தல் ஆணையத்தை அமைத்தனர்.
தேர்தல் நடைமுறையை கண்டிப்புடன் செயல்படுத்தினாலன்றி, `ஒரு மனிதன் ஒரு வாக்கு' என்ற தேர்தல் ஜனநாயக விழுமியத்தைக் கட்டிக்காக்க இயலாது. தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதினாலேயே தேர்தல் ஆணையம் தவறு செய்தது என்ற முன்முடிவிற்கு வருவது நியாயமானது அல்ல.
ஆனால், சீசரின் (ராமரின்) மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதைப் போல, தேர்தல் ஆணையத்தின் செயல்முறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, வாக்காளர்களின் விருப்பம் எந்தவித இடையூறும் இன்றி, நியாயமாகவும் சுதந்திரமாகவும் பிரதிபலிக்கப்படுதல் போன்றவற்றை உறுதி செய்வதற்கு பதிலாகத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றன.
மகாராஷ்டிரா மாநில தேர்தல் வரலாற்றில் நடக்காத அதிசயம்!
இதுவரைக்கும், பல நேரங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக தேர்தல் முறைகேட்டில் தேர்தல் ஆணையமே ஈடுபட்டதாக காத்திரமான தரவுகளுடன் கடந்த 20.11.2024 -ல், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தேர்தல் நடந்த அன்று மாலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக மூன்று அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
முதல் அறிவிப்பில் மாலை 5:00 மணி நிலவரப்படி, 288 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தேறியது. இதுவரையில் 58.22% அதாவது 5,64,88,024 பேர் வாக்களித்து இருக்கின்றனர்.

இன்னும் பல வாக்கு மையங்களில் வாக்குப்பதிவு தொடர்கிறது இரவு 11:45-க்கு இறுதி நிலவரம் தெரியவரும் என்பதைத் தொடர்ந்து இரண்டாவதாக இரவு 11:53- க்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது என்றும், 65.02% அதாவது 6,30,85,732 பேர் வாக்களித்துள்ளனர் என்று அறிவித்தது.
இதன்படி, மாலை 5:00 மணிக்கு மேல் 65,97,708 பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாவதாக வாக்கு எண்ணும் நாளான 22.11.2024 அன்று 6,40,85 095 வாக்குகள் எண்ணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது, 66.05% மொத்தத்தில், 9,99,363 வாக்குகள் அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து மாலை 5:00 மணிக்கு மேல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 75,97,071 அதாவது 7.83% பேர் மாலை 5:00 மணிக்கு மேல் வாக்களித்து இருக்கிறார்கள்.
இதுவரைக்கும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் வரலாற்றில் நடக்காத அதிசயம் இது.
தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டைப் புரிந்து கொள்ள ஏழாம் அறிவு தேவையில்லை!
இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் மே 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 31 (186 MLA) நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 17 (102 MLA) தொகுதிகளிலும் வென்றிருந்த நிலையில், அடுத்த ஐந்து மாதங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 238 சட்டமன்ற தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது.
செயற்கையாக அதிகரித்த வாக்குகள் எண்ணிக்கை பா.ஜ.க கூட்டணி வெற்றிக்கு வழிகோலியது என்பது தொகுதி வாரியான கணக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் ஆறு மாத காலத்திற்குள் முடிவடைய இருந்ததால் பாராளுமன்ற தேர்தலுடனே ஒன்றாக நடத்தி இருக்கலாம்.
ஆனால் ஆளும் பா.ஜ.க கூட்டணி வெற்றிக்கு இசைவாக டிசம்பரில் நடத்தியது என்ற கடுமையான குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக பொருளாதார நிபுணரும், அரசியல் விமர்சகருமான பிரகலா பிரபாகர் அவர்கள் (ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர்) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ல் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப் பட்சமான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியும், தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் பேசி வருகிறார்.
குறிப்பாக 14.8.2024 அன்று கொச்சியில் நடந்த கருத்தரங்கத்தில், Vote for Democracy மற்றும் Association for Democratic Reforms போன்ற நிறுவனங்களின் ஆய்வறிக்கை புள்ளி விவரங்களை கையில் வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் இருந்து எண்ணப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சற்றேறக் குறைய 5 கோடி வாக்குகள் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக கேரளாவில் பா.ஜ.க வென்ற ஒரே தொகுதியான திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ஆணைய குளறுபடிகளினால் கூடுதலான வாக்கு எண்ணிக்கை 86,000 ஆகும்.
ஆனால், பா.ஜ.க உறுப்பினர் வென்ற வாக்கு வித்தியாசம் 75 ஆயிரம் ஆகும். அதோடு 1952 முதல் 2014 வரைக்கும் நடந்த தேர்தல்களில் இந்த வாக்கு வித்தியாசம் 1%-திற்கு மேல் இருந்ததில்லை என்ற ஆதாரப்பூர்வ உண்மையையும் தெரிவித்து இருந்தார்.
இந்த 5 கோடி வாக்கு வித்தியாசத்தில் பெரும்பாலான வாக்குகளை ஏறத்தாழ 12% வரைக்கும் கூடுதலான வாக்குகள் பெற்ற 79 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வென்றிருக்கிறது.
இந்த 79 தொகுதிகளும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான 7 கட்ட தேர்தலில் 2-ம் கட்டமாக நடந்த மாநிலங்களில் வாக்களித்தவர்களின் இறுதி எண்ணிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை.

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டது.
சரியாகச் சொல்வதாக இருந்தால், மக்களின் தீர்ப்பை மாற்றும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டை நடத்தி பா.ஜ.க அரசு வெற்றிக்கு உதவியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு தேவையில்லை.
இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் தேர்தல் ஆணையமும் பா.ஜ.க-வும் கூட்டு சதியின் மூலம் வென்றிருப்பதாக குற்றம் சாட்டியதோடு 7.8.2025 அன்று, இந்த கூட்டுச்சதியை அம்பலப் படுத்தும் "அணுகுண்டு" போடப் போவதாக கூறி வந்தார்.
தேர்தல் ஆணையர்களுக்கு இதுகூட தெரியாதா...
சொன்னதைப் போலவே ராகுல், கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில், ஏறத்தாழ 1,00,250 பேர் போலி வாக்காளர்கள் என்பதை தரவுகளுடன் வெளியிட்டார்.
1) போலியான வாக்காளர்கள் 11,965 பேர்.
2) இல்லாத அல்லது போலியான விலாசம் கொண்டோர் 40009 பேர்.
3) ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் 10,452 பேர்.
4) புகைப்படம் இல்லாத வாக்காளர்கள் 4,132 பேர்.
5) முதல் முறை (18-23 வயது வரை) வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐத் தவறாக பயன்படுத்தியவர்கள் 33,692 பேர் (70-95 வயது வரை).
ஆகிய புள்ளி விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை 6 மாத காலம் ஆராய்ந்த பின் வெளியிட்டார்.

உடனே தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும் ராகுல் காந்தி அவர்களின் கூற்றுகள் அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டி இருக்க வேண்டும்.
ஆனால், ஆணையமோ இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் விதி 1960 20(3)(ஆ) பிரிவுப்படி, தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் மேற்கூறிய இந்த சட்டப் பிரிவு தனி மனிதன் தனது தனிப்பட்ட பெயர் அல்லது முகவரி வாக்காளர் பட்டியலில் இல்லை என்றாலோ தவறாக இருந்தாலோ தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரம் என்பது கூட தேர்தல் ஆணையர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான்.
பீகார் SIR!
இப்படி நாளுக்கு நாள் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் சூழலில் வருகின்ற நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள பிஹார் மாநிலத்தில் முற்றிலும் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.
அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாலும் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதிலே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் பீகார் மாநில அரசியலை தீர்மானிக்கக்கூடிய சீமாஞ்சல், அராரியா, கிஷன்கஞ்ச், பூர்னியா மற்றும் கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களில், மொத்தம் 7.6 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் தொகை சதவீதம் 38% முதல் 68% வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கத்தில் தனாரா கிராமம் போன்ற மிகவும் ஏழ்மையான மகாதலித் மக்கள் வசிக்கின்ற இடங்களில் பெரும்பாலானவர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினரின் விவசாய நிலங்களில் வேலை செய்கின்றனர் அல்லது வேலையில்லாமல் உள்ளனர்.
குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்!
பெரும்பாலான கிராமவாசிகள் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) மற்றும் அதன் தாக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கின்றனர்.
மேலும் அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு வந்தார்களா என்பது கூட பலருக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் மதிக்கின்றனர்.
வாக்குரிமையை இழப்பது பேரழிவாக இருக்கும், எங்களை மேலும் வறுமையில் தள்ளிவிடும் என்று வேதனைப் படுகின்றனர்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து மக்கள் மீண்டும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்ய இயலாத அளவு நிபந்தனைகளை விதித்தனர்.
இதை எதிர்த்து பல சமூக அமைப்புகள் எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கீழ்கண்ட வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

"1) 2025 வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றிருந்தும், வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாத சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் தேர்தல் ஆணையம் வெளியிடும்.
2) இந்தத் தகவல்கள் மாவட்ட வாரியாகவும், வாக்குச் சாவடி வாரியாகவும் வரிசைப்படுத்தப்படும், மேலும் வாக்காளரின் EPIC எண்ணால் தேடக்கூடியதாக இருக்கும்.
3) ஒவ்வொரு வாக்காளருக்கும், சேர்க்கப்படாததற்கான காரணமும் வெளியிடப்படும்.
4) இந்த வெளியீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பீகாரில் பரவலாகப் புழக்கத்தில் உள்ள உள்ளூர் மொழி செய்தித்தாள்களில் பட்டியல் கிடைக்கும் தன்மை விளம்பரப்படுத்தப்படும், மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் ஒளிபரப்பப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிக்கும் இடங்களில், பொது அறிவிப்பும் அங்கு காட்சிப்படுத்தப்படும்.
5) வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல், அவர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில், பொதுமக்கள் முறையாக அணுகும் வகையில், அந்தந்த வட்டார வளர்ச்சி அதிகாரியால் காட்சிப்படுத்தப்படும்.

6) பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும், அத்தகைய கோரிக்கைகள் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையின் நகலுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் பொது அறிவிப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படும்.
7) பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்ட வாக்காளர்களின் மென் நகலை தலைமை நிர்வாக அதிகாரியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என்ற தீர்ப்பின் மூலம் பிஹார் மாநில தேர்தலில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் இணைந்து நடத்த இருந்த கூட்டுச் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய வரலாற்றில் இவ்வளவு கடினமாக உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு உள்ளானதில்லை.
En masse Inclusion or En masse Exclusion? என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி, கடினமான கேள்விகளைக் கேட்டதன் மூலம் தேர்தல் ஆணையம் அது தோற்றுவிக்கப்பட்ட நல்ல நோக்கத்திற்கு நேரெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும், பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் இறங்கியிருப்பதும், குறிப்பாக பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களிக்க கூடியவர்களாகக் கருதப்படுகின்ற சிறுபான்மை மற்றும் பட்டியலின அடித்தட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்திருப்பதும், அவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராகப் பதிவு செய்ய விடாமல் அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அரசு வழங்கிய ஆதார் அட்டை மற்றும் தேர்தல் ஆணையமே வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை செல்லாது என்று அறிவித்தும், நிரந்தரமாக அவர்களை நீக்கி வைக்க முயற்சித்ததும் அவர்களின் வாக்குரிமையை திருடிக் கொண்டதாகத்தானே பொருள்படும்.
- கான்ஸ்டன்டைன் ரவிந்திரன்
(தொடரும்)