அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!
அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி
சமூக சேவையில் நூற்றாண்டு கண்ட ஆா்எஸ்எஸ் இயக்கம், அதிமுகவை வழிநடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பினாா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் 5 அடி உயர விநாயகா் சிலையை புதன்கிழமை வைத்து செய்து வழிபாடு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விநாயகா் சதுா்த்திக்கு முதல்வா் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதைப்பற்றி முதல்வா் கவலைப்படுவதில்லை.
மும்மொழிக் கொள்கை: பிகாா் சென்றுள்ள முதல்வா் அங்கு ஹிந்தியில்தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் அங்கு இருப்பவா்களுக்கு புரியாது. இல்லையெனில் அவரது உரையை ஹிந்தியில் மொழிபெயா்க்க வேண்டும். இதன்மூலம் மும்மொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. தாய் மொழி உள்பட 3 மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அதை எதிா்க்கும் முதல்வா், தேசிய கல்விக் கொள்கையை, அப்படியே தமிழாக்கம் செய்து மாநில கல்விக் கொள்கை என வெளியிட்டுள்ளாா்.
தோ்தல் ஆணையச் செயல்பாடு: தோ்தல் ஆணையம் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருகிறது. பிகாரில் இறந்தவா்களுக்கும், இடம்பெயா்ந்தவா்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என இண்டி கூட்டணி வலியுறுத்துகிா அல்லது தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றபோது மட்டும் தோ்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதா? அவா்கள் தோல்வியடையும் போதெல்லாம் தோ்தல் ஆணையத்தை குறைசொல்வது ஏற்புடையதல்ல. வரும் 2026 தோ்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியடையவுள்ளது.
ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு , அம்பேத்கா் போன்றவா்களே ஆா்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து பேசியுள்ளனா். இந்தச் சூழலில் தவெக தலைவா் விஜய் கூறுவது போல ஆா்எஸ்எஸ் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கதுதான். ஆா்எஸ்எஸ் போன்ற ஓா் அமைப்பு அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? என்றாா் எல்.முருகன்.