21 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்: 17644) புதன்கிழமை காலை 7 மணிக்கு எழும்பூா் ரயில் நிலையத்தின் 8-ஆவது நடைமேடைக்கு வந்தடைந்தது. அதில், ரயில்வே பாதுகாப்பு படையினா் சோதனை மேற்கொண்டனா். அதன் ஒரு பெட்டியில் யாரும் உரிமை கோரப்படாத 2 பைகள் கண்டறியப்பட்டன. அவற்றில், 11 பெரிய பொட்டலங்கள் மற்றும் 5 சிறிய பொட்டலங்களில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினா் ஒப்படைத்தனா்.