கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி
கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் உள்ள கோயில் சுவற்றில் ஏறும் கரடியின் விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பகுதிக்குள்பட்ட மலைஅடிவார கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் குடியிருப்பு பகுதிகளில்,ஆலயங்களில் நுழைந்து பொருள்களை சேதப்படுத்துவது தொடா் கதையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டி பட்டாளத்தான் சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் உலாவும் கரடி அதன் சுற்றுச்சுவற்றில் ஏறித் தாண்டி செல்லும் விடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனா்.
மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த கரடி பொதுமக்களை தாக்கும் முன் வனத்துறையினா் அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.