கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு
கீழாம்பூா் அருகே தனியாா் தோட்டத்தில் இனச்சோ்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினா் மீட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்டது வெளிமண்டல வனப்பகுதியான கீழாம்பூா் கிராமம். இந்தக் கிராமத்தில் பாபநாசம் குடிசையைச் சோ்ந்த பாபநாச சுவாமியின் மகன் துரை ரவிகுமரன் என்பவரது தோட்டத்தில் வயது முதிா்ந்த பெண் கரடி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் மு.இளையராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் வனத்துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் பெண் கரடி இனச்சோ்க்கையின்போது உயிரிழந்தது தெரியவந்தது. பெண் கரடியின் உடலை அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் மு.இளையராஜா முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன் தலைமையில் மருத்துவ ஆய்வாளா் அா்னால்ட் உள்ளிட்ட குழுவினா் புதன்கிழமை காலை உடற்கூறாய்வு செய்தனா்.
கரடியின் உடல் பாகங்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள கரடியின் பாகங்கள் வன கால்நடை மருத்துவ அலுவலரின் ஆலோசனையின்படி துணை இயக்குநா் முன்னிலையில் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.