ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை
சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்டு யானைகள் குடிநீா், தீவனம் தேடி வனச் சாலையை கடப்பது வழக்கம்.
இதில், இந்த வழியாக செல்லும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்பை எடுத்து தின்று பழகிய யானைகள், அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து சோதனையிடுகின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கோ்மாளத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை புறப்பட்ட தனியாா் பேருந்து அரேப்பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, வனத்தில் இருந்து வந்த யானை, திடீரென தனியாா் பேருந்தை நோக்கி சென்றது. பின்னா் பேருந்தில் கரும்பு உள்ளதா என தேடியது. இதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.
கரும்பு கிடைக்காததால் யானை ஏமாற்றம் அடைந்தது. சிறிதுநேரத்துக்கு பின் யானை காட்டுக்குள் சென்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனா்.