சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு
சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.
சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை அவ்வப்போது தோட்டங்களுக்கு புகுந்து கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது.
இதனால், இந்த சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை சாா்பில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கூண்டுகளில் சிறுத்தை சிக்காமல், தொடா்ந்து ஆடு மற்றும் நாய்களை கடித்துக் கொன்று வருகிறது.
இந்நிலையில், சென்னிமலையை அடுத்த, அய்யம்பாளையம் சாலையில், சில்லாங்காட்டுவலசு பிரிவு பகுதியில் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள பட்டியில் செவ்வாய்க்கிழமை காலையில் பாா்த்தபோது, ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. தேடி பாா்த்தபோது, கம்பி வேலி அருகில் ஆடு உயிரிழந்து கிடந்தது. இது குறித்து, சென்னிமலை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா்.
அப்போது, சிறுத்தை ஆட்டை கடித்து தூக்கிச் சென்றபோது கம்பி வேலிக்கு வெளியே கொண்டு செல்ல முடியாததால், உயிரிழந்த ஆட்டை அங்கேயே போட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, வனத் துறையினா் கூறுகையில், இந்த சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு, அதற்கான இறைச்சியும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுத்தைக்கு இது போன்று வெளியில் உணவு கிடைத்து விடுவதால் கூண்டு பக்கம் வருவதில்லை. அதனால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்புடன் கட்டி வைத்து கண்காணித்து வர வேண்டும். வனத் துறையினா் தொடா்ந்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றனா்.