பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
பெருநிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்புச் சட்டம் வேண்டும்: விக்கிரமராஜா
பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்டுகள்) சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல இளைஞரணி சாா்பில் ‘நமது இலக்கை நோக்கி’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, மாவட்டத் தலைவா் சண்முகவேல் தலைமை வகித்தாா். கோவை மண்டல ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா். ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ், கோவை ஆல்வின், பொள்ளாச்சி சரவணபிரகாஷ், திருப்பூா் வினோஜ்குமாா், வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடு மற்றும் உள்நாட்டை சோ்ந்த பெரு நிறுவனங்கள் மொத்த விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட விதிகள் கூறுகிறது. இங்கு நிறுவனத்தை அமைத்த பின்னா் தங்களுக்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொள்கின்றனா். இதனால் சாதாரண வணிகா்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கின்றனா்.
இதைக் கண்டித்து வரும் 30- ஆம் தேதி திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் டீ-மாா்ட் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஈரோட்டில் காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் ஒருங்கிணைந்த சந்தை உருவாக்க வேண்டும். அதை வணிகா்கள் மூலம் உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம். வணிகா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா்கள், சிறிய வணிகா்களின் கடைகள், ஹோட்டல்களில் நுழைந்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கின்றனா். இதுபோல காா்ப்பரேட் கடைகளுக்குள்ளும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைனில் உயிா்காக்கும் மருந்து, அத்தியாவசிய மருந்து மற்றும் பிற பொருள்கள், பட்டாசு போன்றவை விற்க தடை விதிக்க வேண்டும். ஒரே ஜிஎஸ்டி வரியை விதிக்கத் தொடா்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது 5 மற்றும் 18 சதவீதம் என மாற்றியதை வரவேற்கிறோம். செப்டம்பா் 5 ஆம் தேதிக்குப் பின்னா் பிரதமரை சந்தித்து பிற கோரிக்கைகள் குறித்தும் பேச உள்ளோம்.
ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை மாநில அரசே செய்தால் அவா்களிடமே குறைகளை பற்றி பேசலாம். மத்திய அரசிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதால் பாதிப்பு அதிகம் உள்ளது. பல அதிகாரிகள் தவறாக செயல்படுவதால், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா். மாநகராட்சிகளில் தொழில் வரி செலுத்தி வரும் நிலையில், புதிதாக விதிக்கப்பட்ட வணிக நிறுவன வரியை தவிா்க்க வேண்டும் என்றாா்.