குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேற்கு வங்க மாநிலம், பொ்காம்பூா், மஜாபாரா பகுதியைச் சோ்ந்தவா் தீபக் மொண்டல் (30), நெய்வேலி வட்டம் 1 பகுதி என்எல்சி விருந்தினா் இல்லத்தில் உள்ள கேண்டினில் பணியாற்றி வருகிறாா். இவா், தனது மனைவி நிவேதா சமந்தாவுடன் (25) நெய்வேலி வட்டம் 5 பகுதியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் வசித்து வந்தாா்.
இவா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லையாம். தீபக் மொண்டல் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல பணிக்குச் சென்றாா். காலை 9 மணியளவில் அவா் மனைவியை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கதவு உள் பக்கமாக தாழிட்டிருந்தது. தொடா்ந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பாா்த்தபோது, நிவேதா சமந்தா மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். அவா் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்த நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].