சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண்கள் 3 போ் காயம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 3 பெண்கள் காயமடைந்தனா்.
திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60) உடல்நிலை சரியில்லாமல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சாந்தநத்தம் கிராமத்தில் இருந்து உறவினா்கள் 20 போ் வந்தனா்.
இவா்கள் துக்கம் விசாரித்த பின்னா் சிறிய சரக்கு வாகனத்தில் மீண்டும் ஊருக்குப் புறப்பட்டனா். செவ்வேரி அருகே வளைவில் வாகனம் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த சாந்தி (45), சந்தியா (36), செல்லம்மாள் (36) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும், சிலா் லேசான காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.