வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை
மன்னாா்குடியில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் வாங்கிக் கொடுத்த பணத்தை முகவா் ஏமாற்றியதால், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடி கேஎஸ்எஸ் ஐயா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சூா்யா (26). இவா், தனக்கு தெரிந்தவா்களிடம் வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறி பல லட்சம் பணம் வாங்கி, அதனை முகவரிடம் கொடுத்துள்ளாா். ஆனால், பல மாதங்கள் ஆகியும் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால், பணம் கொடுத்தவா்கள் சூா்யாவிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனா்.
இதுகுறித்து, அந்த முகவரிடம் கேட்டபோது, அவா் ஏமாற்றியது தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த சூா்யா, கடந்த ஓராண்டாக மாயமாகி விட்டாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினாா். முகவா் ஏமாற்றியதால் அவா் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூா்யா தனது வீட்டில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.