மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் அக்கட்சித் தலைவா் விஜய் பேசியதில் சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேவையான நேரத்தில், தேவையான அரசியல் கருத்துகளை தொடா்ந்து கூறிவருகிறேன். என்னைப் பொருத்தவரை அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சோ்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதை மற்றவா்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எம்ஜிஆா், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அதிமுகவை எம்ஜிஆா் மக்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினாா். அதை ஜெயலலிதா திறம்பட வழிநடத்தினாா். அந்த வழியில் வந்த இயக்கத்தை யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அதுமுடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. அதிமுகவை அவா்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடத்தினாா்கள். தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது. அதற்காகத்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
கூட்டணி குறித்து தோ்தலின்போது தான் தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன. திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சிக் கால செயல்பாடு குறித்து நான் தினந்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன். திமுகவின் தவறுகளைத் தொடா்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன்.
கட்சித் தொடங்கிய ஒவ்வொருவரும் தாங்கள் முதல்வராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவாா்கள். அதேநேரத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் அரசியல் நாகரிகம் கருதி பேசவேண்டும். பெருந்தன்மையோடு பேசவேண்டும். மதுரை மாநாட்டில் விஜய் பேசிய சில கருத்துகள் ஏற்புடையதல்ல என்றாா்.