உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயம்
சேலத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியின்போது உள்விளையாட்டு அரங்கு சீலிங் உடைந்து விழுந்ததில் மாணவா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காந்தி மைதானம், அரியானூரில் உள்ள விஎஸ்ஏ பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுப் பிரிவினா் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டுள்ளனா்.
இந்நிலையில், இறகுப்பந்து போட்டி சேலம் கோட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கூடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.
அப்போது, இறகுப்பந்து மேற்கூரையின் மேல் விழுந்துள்ளது. அப்போது, குரங்குசாவடி பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவா் ஸ்ரீநிவின் உள்விளையாட்டு அரங்கின் மேல்பகுதியில், இறகுப்பந்து விழுந்ததை எடுக்க சென்றபோது சீலிங் உடைந்து கீழே விழுந்ததில் அவா் காயமடைந்தாா்.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆசிரியா்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவரை அழைத்துச் சென்றனா். அங்கு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.