மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
25% + 25%... இந்தியா மீதான ட்ரம்பின் வரி இன்று முதல் அமல்; பாதிப்புகள் என்னென்ன?
ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தக விவகாரத்தில் இந்தியா ஈடுபடக் கூடாது என்று கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஜூலையில் இந்திய பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதித்தார்.
அதைத்தொடர்ந்து, இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போவதாகக் கூறிவந்த ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் (ஆகஸ்ட் 6), ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக ஏற்கெனவே இருந்த 25 சதவிகித வரி மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக அறிவித்தார்.

இந்த அபராத வரி அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால், பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவால் 50 சதவிகித வரிவிதிப்புக்குள்ளான நாடானது இந்தியா.
இந்த நிலையில் ட்ரம்ப் அறிவித்தபடி இந்திய பொருள்கள் மீதான 50 சதவிகித வரி இன்று (ஆகஸ்ட் 27) காலை 09:30 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 87.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களில் கிட்டத்தட்ட பாதி பொருள்கள் ட்ரம்பின் 50 சதவிகித வரிக்கு உள்ளாகும்.
குறிப்பாக, ஜவுளி, நகைகள், கடல் உணவுகள், தோல் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பாதிப்புக்குள்ளாகும்.

அதோடு, ஏராளமான இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிநீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்காவுக்கு முக்கிய மருந்து சப்ளையாராக இந்தியா இருப்பதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருள்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மின்னணு பொருள்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.