மாதச் சம்பளத்திலிருந்து பாதுகாப்பு வரை... குடியரசு துணைத் தலைவருக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன?!
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவி வகிப்பவர் துணை குடியரசுத் தலைவர் ஆவார். அதே சமயம் ராஜ்ய சபாவின் தலைவராகவும் துணை குடியரசு தலைவர் பதவில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். இவர்களுக்கென சிறப்பு சலுகைகள், பாதுகாப்பு, வசதிகள் அனைத்தும் அரசால் வழங்கப்படுகின்றன.
துணை குடியரசுத் தலைவர் பதவி
அரசியலமைப்பின் 63வது பிரிவு படி, இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் பதவி இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர், நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவின் தலைவராக (Chairman of Rajya Sabha) செயல்படுகிறார்.
குடியரசுத் தலைவர் உடல்நலக்குறைவு அல்லது இடைவிடா காரணங்களால் தன் கடமைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வரும் பட்சத்தில் துணை குடியரசுத் தலைவர் தற்காலிகமாக குடியரசுத் தலைவர் பொறுப்பையும் ஏற்கலாம்.

சலுகைகள்
துணை குடியரசுத் தலைவர் தனது பொறுப்புகளை சுதந்திரமாகவும், தடையின்றியும் நிறைவேற்ற அரசு பல்வேறு சலுகைகள் வழங்குகிறது.
மாத சம்பளம், அலவன்ஸ், பயணச் செலவுகள், உத்தியோகப்பூர்வ செலவுகள் அனைத்தும் அரசால் ஏற்கப்படும். ஓய்வு பெற்ற பின்பும் ஓய்வூதியம் மற்றும் சில சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ வீடு
டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு, இதுதவிர பாதுகாப்பு, பராமரிப்பு, அலுவலக வசதி, விருந்தினர் விடுதி ஆகியவை சேர்த்து கிடைக்கும்.
பாதுகாப்பு
Z+ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை (NSG), டெல்லி காவல்துறை, CISF ஆகியோர் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
பயண வசதிகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை ரீதியான பயணங்களின் செலவுகளை அரசே ஏற்கும். விமானம், ரயில், வாகனம் அனைத்தும் இலவசம். வெளிநாட்டு பயணங்களில் சிறப்பு தூதரக மரியாதை வழங்கப்படுகிறது.
மருத்துவ சலுகைகள்
துணை குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான இலவச மருத்துவ சேவை உள்ளது. AIIMS உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகள்
துணை குடியரசுத் தலைவராக பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் சில சலுகைகள் தொடர்ந்தும் கிடைக்கும். ஓய்வூதியம், குறிப்பிட்ட காலத்திற்கு அரசு வழங்கும் வீடு, பாதுகாப்பு, மருத்துவ சேவைகள் ஆகியவை ஓய்வு பெற்ற பின்பும் கிடைக்கும்.