மாதம் ரூ.1500: `பெண்களுக்கான திட்டத்தில் எப்படி ஆண்கள்?' - மகாராஷ்டிரா அரசு அதிர...
காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யாகு சொல்வதென்ன?
இஸ்ரேல் - காஸா போர்
இஸ்ரேல் - காஸாவுக்கு இடையே தொடர்ந்துவரும் போரில் நாளுக்கு நாள் நிலமை கொடூரமாகிக்கொண்டே இருக்கிறது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் முக்கிய சுகாதார மையமான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள் இரட்டைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
அதாவது முதலில் மருத்துவமனை வளாகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்களுக்கு உதவிக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
20 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் ஐந்து பத்திரிகையாளர்கள் மற்றும் நான்கு சுகாதாரப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் கேமராமேன் ஹுசாம் அல்-மஸ்ரி, AP செய்தி நிறுவனத்தின் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் மரியம் டாகா (33), அல் ஜசீராவின் முகமது சலாமா, மிடில் ஈஸ்ட் ஐ நிறுவனத்தின் அகமது அபு அஜீஸ் மற்றும் புகைப்படக் கலைஞர் மோவாஸ் அபு தாஹா ஆகிய பத்திரிகையாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம்
இந்த தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ``நடந்திருக்கும் சம்பவம் மிகவும் துயரமான விபத்து. முழுமையான விசாரணை நடத்தப்படும்" என அறிவித்திருக்கிறார்.
உலக நாடுகள் கண்டனம்
அக்டோபர் 2023-ல் காசா போர் தொடங்கியதிலிருந்து இப்போது வரை 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (CPJ) கூற்றுப்படி, ``காஸா போர் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்" என வரையறுத்திருக்கிறது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன், இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி உள்ளிட்டோர் இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்து உடனடி போர்நிறுத்தமும், பாரபட்சமற்ற விசாரணையும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.