பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!
யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சேவைகள் அனைத்திற்கும் பயனரின் மொபைல் எண்ணில் இருந்து ஓடிபி பெறப்படுகிறது. இதன் மூலமாக தனிப்பட்டவர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. எனவே மொபைல் எண் ஓடிபி பெறுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்கமாரி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணை முடிவில் நீதிபதிகள்,
"ஓடிபி எண் மூலமாக மக்களின் தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகிறது என பொதுவாக கூற முடியாது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஓடிபி பெறாமல் எந்த ஆன்லைன் சேவையும் நடைபெறாது.
அனைத்து வகையான ஓடிபிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. தரவுகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு ஓடிபி பெறுகின்றன.
யுபிஐ பணப்பரிவர்த்தனை, ரயில் டிக்கெட், உணவு ஆர்டர், வாடகை கார் போன்றவற்றுக்கு ஓடிபி பெற தடை விதிக்க முடியாது.
மனுதாரர் விளம்பர நோக்கில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தால் அதுபற்றி விசாரிக்கலாம்" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.