வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கவின்குமாரின் தந்தை சந்திரசேகர் "கவினைக் கொலை செய்தவர்களின் இரண்டு பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். தைரியமாக இருங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் "கவின்குமாரின் குடும்பத்துக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேசமயம் கவின்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதனை தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது" என்றார்.
தொடர்ந்து, "தூய்மைப் பணியாளர்கள் விஷயத்தில் நான் சொன்னதைச் சில பேர் தவறாக விமர்சிக்கிறார்கள். தனியார்மயம் ஆக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஆனால் அந்தத் தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும்தான் என்கிற வகையில் நிரந்தரப்படுத்திவிடக் கூடாது. எந்திரமயப்படுத்த வேண்டும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி அவர்களை மீள செய்ய வேண்டும்" என்றார்.
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், "ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி வலுவான கோரிக்கைகளை முன்வைக்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள். ஆனால் தேர்தல் நேரம், சமூக வாக்குகளுக்குப் பாதிப்பு வந்துவிடும் எனக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது தி.மு.க" என்கிறார்கள்.