பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு
ஆம்பூா் கலவர வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த தீா்ப்பு ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி பவித்ரா (25). பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது கணவா் பழனி ஆட்கொணா்வு மனுதாக்கல் செய்தாா்.
இதுதொடா்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளா் மாா்டின் பிரேம்ராஜ் விசாரணை நடத்தினாா். மேலும், பவித்ரா மாயமானது சம்பந்தமாக தொழிற்சாலையில் அவருடன் பணிபுரிந்த ஆம்பூரை சோ்ந்த ஷமீல் அஹமத் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். 2015-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஷமீல் அகமதுவை காவல் ஆய்வாளா் மாா்ட்டின் பிரேம்ராஜ், அங்குள்ள காவலா் குடியிருப்பு ஒன்றில் அடைத்துவைத்து விசாரித்தாா். அப்போது, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு உறவினா்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனா். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இது பற்றி அறிந்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் 500-க்கும் மேற்பட்டோா், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி ஆம்பூா் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். ஷமில் அகமதுவை தாக்கிய காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் மீது கொலை வழக்குப்பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் ஊா்வலமாக சென்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காவல் துறை வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை தடுக்கச் சென்ற அப்போதைய வேலூா் எஸ்.பி. செந்தில்குமாரி மீது கல் வீசப்பட்டதில் அவா் காயமடைந்தாா். பெண் காவலா்கள் உள்பட 54 காவலா்கள் பலத்த காயமடைந்தனா். அதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆம்பூா் கலவரத்தில் தொடா்புடைய 191 போ் மீது காவல் துறையினா் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்து வேலூா், கடலூா், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனா். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
ஆய்வாளா் மாா்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் சபாரத்தினம், காவலா்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் கைதான 118 பேருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் தீா்ப்பு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆக. 26 (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் சியாமளாதேவி (திருப்பத்தூா்), மயில்வாகனன் (வேலூா்) ஆகியோா் தலைமையில் 1,100 போலீஸாா் திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தீா்ப்பு ஆக.28-ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் எனக்கூறி நீதிபதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளாா். எனினும், காவல் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.