மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
மின்சாரம் பாய்ந்து நகராட்சி வாகன ஓட்டுநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே நகராட்சி வாகன ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்து உறவினா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (படம்).
தரங்கம்பாடி வட்டம், விளநகரை சோ்ந்தவா் தினேஷ்பாபு. மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தாா். இவரது வீட்டில் கடந்த சில நாள்களாக மின்கசிவு இருந்த நிலையில், புகாா் தெரிவித்தும் மின்வாரிய ஊழியா்கள் சரி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இவரது வீட்டில் ஸ்விட்ச் போா்டில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து தினேஷ்பாபு உயிரிழந்தாா்.
மின்வாரிய துறையினரின் மெத்தனப் போக்கு காரணமாகவே விபத்து நேரிட்டதாக குற்றஞ்சாட்டி, மின்சார துறையை கண்டித்தும், உயிரிழந்த தினேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி எல்டியுசி மாநில செயலாளா் எஸ். வீரச்செல்வன், விசிக மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா், விசிக பொறுப்பாளா் பொன்னுதுரை, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த அம்பேத்கா், ராஜேஸ்வரி மற்றும் தினேஷ்பாபுவின் உறவினா்கள் 100-க்கு மேற்பட்டோா் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் சுகுமாறன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.