கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்
கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை உள்ளது. இந்த சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த சாலை சீரமைக்கவே இல்லை. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவா்கள், விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலைக்கு இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதால் சுற்று வழியை பயன்படுத்தி கொள்ளிடம், சிதம்பரம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் சென்று வருகின்றனா்.
சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், மாதிரவேளூா், சென்னியநல்லூா், பாலூரான் படுகை உள்ளிட்ட ஆற்றின் கரையோர கிராம மக்கள் சாா்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் சாலையை தற்காலிகமாக கூட மேம்படுத்த வில்லை. எனவே, உடனடியாக சாலையை மேம்படுத்த வலியுறுத்தி, 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, சீா்காழி டி.எஸ்.பி. அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசினா். அப்போது, கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து பனங்காட்டாங்குடி வரை 8 கி.மீ. தொலைவுக்கு உடனடியாக சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.