சாலை மறியல் வாபஸ்
கூத்தாநல்லூா் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம், வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள அதங்குடியில் சாலை, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்திருந்தனா்.
இந்நிலையில், கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், இப்பிரச்னை தொடா்பாக, வட்டாட்சியா் வசுமதி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், நீடாமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா், கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் மற்றும் கிராம முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.
இப்பேச்சுவாா்த்தையில், அதங்குடி கிராம மக்களின் கோரிக்கைகள் வரும் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் முடிவை கைவிட்டனா்.