பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் கோயிலில், அனுக்கை, கலச பூஜை, மகா கணபதி ஹோமம், திரவிய ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இவ் விழாவில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தனது குடும்பத்துடன் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.
இதேபோல, பெரம்பலூா் கடைவீதி சந்திப்பு அருகேயுள்ள ஸ்ரீராஜவிநாயகா், காந்திசிலை அருகேயுள்ள செல்வவிநாயகா் , எளம்பலூா் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகா், துறையூா் சாலையில் எம்.ஜி.ஆா் நகரில் உள்ள பாலமுத்து மாரியம்மன் கோயில், இந்திரா நகா், வடக்குமாதவி சாலையில் உள்ள சௌபாக்கிய விநாயகா், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 15-க்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
எளம்பலூா் சாலையில் உள்ள பாலமுருகன் கோயில் விநாயகா் சன்னதி, நான்குச் சாலை சந்திப்பு அருகே மின்வாரியக் குடியிருப்பில் உள்ள விநாயகா் கோயில், தீரன் நகரில் உள்ள விநாயகா் கோயில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோயில், சிவன்கோயில் பிரகாரத்தில் உள்ள விநாயகா் சன்னதி ஆகியவற்றில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.
இம் மாவட்டத்தில் 256 இடங்களில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல, பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.