மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்
Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!
இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள்.
மேலே சொன்னவை தவிர்த்து வேறு சில விஷயங்களும் எடையைக் கூட்டலாம். அப்படியான விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் முத்தையா.

டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும்போது, வேறு வேலைகளின் மீது கவனம் இருக்காது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடைவெளிவிடாமல் பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
அப்போது என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே பலர் அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அது போன்ற நேரங்களில் உணவின் அளவில் அவர்களுக்கு கவனம் இருக்காது. திரைகளைப் பார்த்தபடி சாப்பிடும் ஒருவர் சராசரியாக ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது தெரியவந்திருக்கிறது.
மூன்று வேளை உணவில் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பதால், உடலின் வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்கும். இதனால் பசி அதிகரித்து, அடுத்த வேளை உணவை இரண்டு மடங்காக உட்கொள்ளவேண்டிய சூழல் உருவாகலாம்.
இரண்டு வேளைக்கான உணவை ஒரே நேரத்தில் உட்கொள்வது ஆபத்தானது. சிலர் பசியைப் பொறுக்க முடியாமல், நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவார்கள். அதுவும், தவறான பழக்கமே.
சரியான நேரத்துக்கு, சரியான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, உடல் பருமன் ஏற்படும். காலை உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

கொழுப்புச்சத்தில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. நல்ல கொழுப்புள்ள உணவுகளில், கலோரியின் அளவு குறைவாக இருக்கும். மேலும் அவை, உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புச் சத்துகளையும் எளிதில் கரைத்துவிடும்.
எனவே, அவற்றை எந்தச் சூழலிலும் தவிர்க்கக் கூடாது. நட்ஸ், அவகேடோ, ஆலிவ் ஆயில், மீன் உணவுகள் போன்றவை நல்ல கொழுப்புச்சத்துள்ள உணவுகள்.
அவசர அவசரமாகச் சாப்பிடுவது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்படிச் சாப்பிடும்போது, உணவை மெல்லாமல் அப்படியே விழுங்கவேண்டியிருக்கும். அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும், பசியுணர்வு குறையாது.
எனவே, பசி அடங்கும்வரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில், அளவுக்கதிகமாகச் சாப்பிடுவார்கள். தொடர்ந்து சில தினங்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால், செரிமானக் கோளாறுகள் அதிகரித்து உடல் சார்ந்த கோளாறுகள், நெஞ்செரிச்சல், உடல் பருமன் போன்றவை ஏற்படும்.

மனஅழுத்தம் அதிகரிப்பதால், உடலிலுள்ள ‘கார்டிசால்’ (Cortisol) ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஹார்மோன், உடலின் இன்சுலின் அளவை அதிகரித்து, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும்.
ரத்தச் சர்க்கரை அளவு குறையும்போது, பசியுணர்வு அதிகரிக்கும். மேலும், உடல் வளர்ச்சிக்குத் தேவையான டெஸ்டோஸ்டீரான் (Testosterone) ஹார்மோனையும் குறைத்துவிடும். இவையெல்லாம், உடல் பருமனுக்கு மறைமுகக் காரணங்களாகலாம்.
மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள் அவற்றைக் கூடுதலாகச் சாப்பிடும் எண்ணத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். எனவே, அத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள், பேக்கரி உணவுகள் போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...