களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிக்கு அடுத்தபடியாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.
களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு தேவநல்லூா், மீனவன்குளம், சேரன்மகாதேவி, நான்குனேரி ஆகிய 4 பிரதான வழித்தடங்கள் உள்ளன. ஆனால், மிகக்குறைந்த தொலைவு கொண்ட நான்குனேரி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு பேருந்து வசதி இல்லை. ஏனைய, பிற வழித்தடங்களிலும் குறைந்தளவிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால், களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்ல பெரும்பாலான நேரங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துக்குக் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், முதியோா்கள், பெண்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
வள்ளியூா், களக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் தனியாா் பேருந்தும், கடந்த சில ஆண்டுகளாகவே வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படுவதில்லை. இந்த பேருந்துக்குப் பதிலாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.
களக்காடு - திருநெல்வேலி, திருநெல்வேலி - களக்காடு இடையே 1 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற வகையில் இயக்கினால் பொதுமக்கள் பயன்பெறுவா். சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.