உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.
இவா்களின் நியமனத்துக்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை அளித்த நிலையில், அதை ஏற்று இரு நீதிபதிகளின் நியமன அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இவா்கள் பதவி ஏற்பதன் மூலம், உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பலத்தை எட்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க உள்ள பஞ்சோலி, வரும் 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 2-இல் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஓய்வுபெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. தலைமை நீதிபதியாக 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்று, 2033-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பணி ஓய்வு பெறுவாா்.
இரு நீதிபதிகளும், உயா் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதிகளாகி, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றவா்கள்.
நீதிபதி பஞ்சோலி குஜராத் உயா்நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு அக்டோபா் 1-இல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2016-ஆம் ஆண்டு ஜூன் 10-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2023-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட அவா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வுபெற்றாா்.
நீதிபதி ஆலோக் அராதே, மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி நிரந்தர நீதிபதியானாா். 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 20-இல் ஜம்மு-காஷ்மீா் உயா் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவா், 2018-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி அதே உயா்நீதிமன்ரத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியானாா். 2018-ஆம் ஆண்டு நவம்பா் 17-இல் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். 2022-ஆம் ஆண்டு ஜூலை 3-இல் அதே உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபியானாா். 2023-ஆம் ஆண்டு ஜூலை 19-இல் தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
14 நீதிபதிகளை இடமாற்ற பரிந்துரை: பல்வேறு உயா்நீதிமன்றங்களின் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் கடந்த 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நீதிபதிகளின் பட்டியல் (அடைப்புக்குறிக்குள் தற்போது பணிபுரியும் உயா்நீதிமன்றம்):
நீதிபதி பெயா் - மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ள உயா்நீதிமன்றம்
அதுல் ஸ்ரீதரன் (மத்திய பிரதேசம்) சத்தீஸ்கா்
சஞ்சய் அக்ரவால் (சத்தீஸ்கா்) அலாகாபாத்
ஜே.நிஷா பானு (சென்னை) கேரளம்
தினேஷ் மேத்தா (ராஜஸ்தான்) தில்லி
அவ்நீஷ் ஜிங்கன் (ராஜஸ்தான்) தில்லி
அருண் மோங்கா (தில்லி) ராஜஸ்தான்
சஞ்சய் குமாா் சிங் (அலாகாபாத்) பாட்னா
ரோஹித் ரஞ்சன் அகா்வால் (அலாகாபாத்) கொல்கத்தா
மன்வேந்திரநாத் ராய் (குஜராத்) ஆந்திரம்
தொனாடி ரமேஷ் (அலாகாபாத்) ஆந்திரம்
சந்தீப் நட்வா்லால் பட் (குஜராத்) மத்திய பிரதேசம்
சி.எஸ். சுதா (கேரளம்) தில்லி
தாரா விதஸ்தா கஞ்சு (தில்லி) கா்நாடகம்
சுபேந்து சாமந்த் (கொல்கத்தா) ஆந்திரம்