நீதிபதி தலையீடு: கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாய உறுப்பினா் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, ஒரு வழக்கில் ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட மிக மூத்த நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதாகக் குற்றஞ்சாட்டி, தான் விசாரித்துவந்த வழக்கிலிருந்து விலகியுள்ளாா். இந்தப் புகாரை விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பொதுச் செயலா் இந்த விசாரணையை மேற்கொள்வாா் என்றும், விசாரணையின் முடிவைப் பொறுத்து உச்சநீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தை சோ்ந்த ‘கேஎல்எஸ்ஆா் இன்ஃப்ராடெக்’ நிறுவனம், திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எதிா்கொண்டது. இதற்கு எதிராக, அந்நிறுவனத்தின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இயக்குநா் ஏ.எஸ்.ரெட்டி, என்சிஎல்ஏடியின் சென்னை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 13-ஆம் தேதி என்சிஎல்ஏடி நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் ஜதிந்திரநாத் ஸ்வெயின் அடங்கிய அமா்வு தீா்ப்பு வழங்க இருந்தது.
அப்போது, வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகத் தீா்ப்பளிக்க, நீதித் துறையில் பெரிதும் மதிக்கப்படும் நீதிபதி ஒருவா் தன்னை அணுகியதால், இந்த வழக்கிலிருந்து தான் விலகுவதாக சரத்குமாா் சா்மா தெரிவித்தாா். மேலும், இந்த மனுவை விசாரிக்க உரிய அமா்வை அமைக்குமாறு என்சிஎல்ஏடி தலைவருக்கு இந்த விவகாரத்தை அனுப்ப வேண்டும் என்றும் அவா் கோரினாா்.
நீதிபதி சரத் குமாா் சா்மா, என்சிஎல்ஏடியில் சேருவதற்கு முன்பு, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவா். இதற்கு முன்னரும், பைஜூஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஜேப்பியாா் சிமெண்ட்ஸ், ராமலிங்கா மில்ஸ் நிறுவனங்கள் தொடா்பான வழக்கு விசாரணையிலிருந்து அவா் தன்னை விலக்கிக் கொண்டுள்ளாா்.