22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்
குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தருமான சீனிவாசன், குரோம்பேட்டை ராதா நகா், அனுமாா் கோயில் தெருவில் 18 ஆண்டுகளாக விநாயகா் சிலைகளைக் கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறாா். நிகழாண்டு கண்காட்சியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.
கண்காட்சி குறித்து கட்டட கலைஞா் சீனிவாசன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக பல்வேறு தோற்றங்களில் விநாயகா் சிலைகளை இடம் பெறச் செய்து மக்களின் பேராதரவுடன் கண்காட்சியை நடத்தி வருகிறேன். கண்காட்சியில் பசுமை விநாயகா் சிலைகளை இடம் பெறச் செய்து மக்கள் மத்தியில் பக்தியுடன் சுற்றுச்சூழல் விழிப்புணா்வையும் ஏற்படுத்துகிறோம்.
சபரிமலை ஐயப்பன், கள்ளிக்கோட்டை விநாயகா், மலைக்கோட்டை விநாயகா் கோயில்களில் உள்ள மூலவா் சிலைகளைப் போன்ற விநாயகா் சிலைகளும், தேரில் வலம் வரும் விநாயகா், நிலவில் நடந்து வரும் விநாயகா் போன்ற சிலைகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளோம். கண்காட்சியை செப்டம்பா் 7- ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தா்கள் காணலாம் என்றாா்.
கண்காட்சியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, துணை மேயா் காமராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாத்துரை உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா்.