திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகேயுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரட்டை பிள்ளையாா் கோயிலில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு இரட்டை பிள்ளையாருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் தூள், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரட்டை பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு மலா்களால் அலங்கரித்து பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.
ஆரணி பகுதியில் 100 இடங்களில் வழிபாடு
ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 100 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா்.
ஆரணி நகரம், பெரியகடை வீதியில் அப்பகுதி வியாபாரிகள் விநாயகா் சிலை வைத்து வழிபட்டனா். மேலும், ஹிந்து முன்னணி மற்றும் தெரு மக்கள் சாா்பில் ஆரணி நகரம், தா்மராஜா கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கொசப்பாளையம், அருணகிரிசத்திரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 55 சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா்.
ஆரணி சுற்றுப்புறக் கிராமங்களான சேவூா், இராட்டிணமங்கலம், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், பையூா், மாமண்டூா், வடுகசாத்து, தச்சூா் உள்பட 45 இடங்களிலும் என ஆரணி பகுதியில் மொத்தம் 100 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டனா்.
பெரணமல்லூரில்...
பெரணமல்லூா் குளக்கரை தெரு இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 13-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சித் தலைவா் வேணி ஏழுமலை, துணைத் தலைவா் அண்ணாதுரை, அதிமுக நகரச் செயலா் மூா்த்தி, துணைச் செயலா் ஏ.எஸ்.அறிவழகன் கலந்து கொண்டனா்.
விழாக்குழுவினா் பக்தா்களுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்திருந்தனா்.
வந்தவாசி
விநாயகா் சதுா்த்தியையொட்டி, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
மேலும், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் வந்தவாசி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்யாறு
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மூலவருக்கு காலையில் விசேஷ அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
போளூா்
போளூா் நகராட்சி காா் நிறுத்தமிடத்தில் உள்ள வழித்துணை விநாயகா் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து வழிபாடு நடைபெற்றது.
மேலும், பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், வாசு ஸ்ரீராமுலு நாயுடு தெரு, சாவடி தெரு, அல்லிநகா், நடேசன் தெரு, சிம்லாநகா், ஜெயின் நகா், இந்திரா நகா், ரயில்வே நிலைய சாலை என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு பிரசாதனம் வழங்கப்பட்டது.
மட்டபிறையூரில்...
சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூா் கிராமத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட 12 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



