வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதி மற்றும் தென்னம்பட்டு கிராமத்தில் தலா ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்,
அழிவிடை தாங்கி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் சாலை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் கட்டடம், ஜம்போடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை மற்றும் பேவா் பிளாக் சாலை, அதேபகுதியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 17 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.12 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அழிலிடைதாங்கி, தென்னம்பட்டு, ஜம்போடை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி முன்னிலை வகித்தாா்.
இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி கலந்து கொண்டு வளா்ச்சிப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் வட்டாட்சியா்கள் தமிழ்மணி, அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.