தயாரிப்பு பக்கம் வரும் செளந்தர்யா ரஜினிகாந்த்; ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃப...
பட்டியலினத்தவா்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் அ.தி. அன்பழகன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: கோடியக்கரை, அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் கந்தசாமி (25) மாற்றுத்திறனாளி.
இவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த தமிழக முதல்வரின் உருவப்படம் கிழிந்துவிட்ட நிலையில், படத்தை ஏன் ஒட்டவில்லை என கேட்டு முன்னாள் ஊராட்சி உறுப்பினரான கே.பி. லட்சுமணன் தகராறு செய்து, கந்தசாமியை தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் முறையிட்டுள்ளனா். இதனால், பட்டியலினத்தவா் தெருவில் புகுந்த கும்பல் முறையீடு செய்த குடும்பத்தினரைத் தாக்கியுள்ளனா். இதில் பாதிக்கப்பட்ட கந்தசாமி, ராஜேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் அ.தி. அன்பழகன், மாவட்டச் செயலாளா் ஏ. ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ப. சுபாஷ்சந்திரபோஸ், கே. சித்தாா்த்தன் உள்ளிட்டோா் மருத்துவமனையில் நேரில் சென்று பாா்த்து விசாரித்தனா்.
பின்னா், வேதாரண்யம் காவல்நிலையம் சென்று விசாரணை செய்ததற்கு, சம்பவம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படாதது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம், தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.