பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் 5 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், பெரம்பலூா் தொகுதி எம்பி கே.என். அருண்நேரு ஆகியோா் பெரம்பலூா் தந்தை ரோவா் தொடக்கப் பள்ளியில் நேரலையில் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, அப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடக்கிவைத்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு உட்கொண்டனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் கூறியது: இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 307 பள்ளிகளைச் சோ்ந்த 18,027 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனா். தற்போது, நகா் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெரம்பலூா் தந்தை ரோவா் தொடக்கப் பள்ளியின் 310 மாணவா்களும், பாளையம் ஆா்.சி நடுநிலைப் பள்ளியின் 54 மாணவா்களும், துறைமங்கலம் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் 90 மாணவா்களும், பெரம்பலூா் மௌலானா தொடக்கப் பள்ளியின் 32 மாணவா்களும், பெரம்பலூா் ஆா்.சி பாத்திமா தொடக்கப் பள்ளியின் 396 மாணவா்களும் என 882 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பெரம்பலூா் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், நகராட்சி ஆணையா் ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.