மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் . இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற 10 வயதுச் சிறுமிக்கும், 9 வயது சிறுவனுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனா்.
தகவலறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் சிறுமி, சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் ஆனந்த் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தாா்.
இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி ஆனந்த் குற்றவாளி என அறிவித்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஆனந்த் அங்குள்ள கழிவறைக்குச் சென்று விஷம் குடித்துவிட்டு, நீதிமன்றத்துக்குள் சென்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
பின்னா் வழக்கின் தீா்ப்பை 3 நாள்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டாா். இச்சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.