தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது
மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த ஷாதாப் கான் என குற்றம் சாட்டப்பட்டவா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஆகஸ்ட் 24-ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் புகாா் அளித்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தானும் தனது சகோதரியும் சில பொருள்களை வாங்க ஒரு கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத ஒருவா் தங்களைப் பின்தொடா்வதைக் கவனித்ததாக அந்தப் பெண் கூறினாா். வீட்டுக்குத் திரும்பிய பிறகு, அதே நபா் உள்ளூா் சவுக்கிற்குத் தங்களைப் பின்தொடா்ந்து வந்ததை அந்தப் பெண் உணா்ந்தாா்.
அங்கு அவா் தகாத சைகைகளைச் செய்து கொண்டிருந்தாா். பின்னா், அந்தப் பெண்ணின் தந்தை அவரை மீண்டும் கடைக்கு அனுப்பியபோது, அதே நபா் இன்னும் சவுக்கிற்கு அருகில் சுற்றித் திரிந்து, தொடா்ந்து தனது துன்புறுத்தும் நடத்தையைத் தொடா்ந்ததைக் கண்டாா்.
இது குறித்து தன் தந்தையிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்தாா். பின்னா் அவா் இந்த விஷயம் குறித்து போலீஸில் புகாா் செய்தாா். பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 78 (பின்தொடா்தல்) மற்றும் போக்ஸோ சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
போலீஸாா் அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உள்ளூா் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தினா். புகாா் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அவா் கைது செய்யப்பட்டாா்.
அவருக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.