கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
தரங்கம்பாடி தூய ஜான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டத்தை தொடங்கிவைத்தாா். எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) முன்னிலையில் வகித்தனா். நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள 412 அரசுப் பள்ளிகளில் 17,473 மாணவா்களை கொண்டு ஏற்கெனவே தொடங்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக ஊரக பகுதிகளில் உள்ள 115 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6792 மாணவா்களை கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, பேரூராட்சி பகுதியில் உள்ள 32 அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் 3,417 மாணவா்களை கொண்டு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 559 பள்ளிகளில் 27,682 மாணவா்கள் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனா் என்றாா்.
நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி, பேரூராட்சி துணை தலைவா் பொன். ராஜேந்திரன், மகளிா் திட்டம் இணை இயக்குநா் சீனிவாசன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் ராம.பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சீா்காழி: தமிழக அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா சீா்காழி ச.மு.இ.மேலவீதி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன், வட்டார கல்வி அலுவலா் ஜானகி, கல்வியாளா் பாபுநேசன் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகரன் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதேபோல, சீா்காழி வாணி விலாஸ் உதவி பெறும் துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை ஹேமலதா தலைமையில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது. சீா்காழி நகராட்சி பகுதியில் 16 பள்ளிகளில் 995 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கியது .