வேளாங்கண்ணி பெருவிழாவின்போது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும்: ஆட்சியா்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாள்களில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: வேளாங்கண்ணி பெருவிழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பேருந்து பயணம் செய்ய பல்வேறு மண்டலங்களிலிருந்து 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு திருடா்களின் தொல்லை ஏற்படாத வகையில் காவல் துறை உயா் கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் சிசிடிவி கேமரா அமைத்து பாதுகாக்க வேண்டும்.
கொடியேற்றும் நாள் மற்றும் தோ் செல்லும் காலங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க பாதுகாப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் அதிகளவில் ஹேன்ட் மை பயன்படுத்த வேண்டும், விழாவில், யாத்திரிகா்களின் குழந்தைகள் காணாமல் போகாதவகையில் நீரில் அழியாத அடையாள அட்டையை கையில் அணிவித்து பெற்றோரின் கைப்பேசி எண்ணை பதிவிட வேண்டும்.
பொதுமக்கள் விழா நாள்களில் கடற்கரையில் குளிக்கத் தடை விதிக்க வேண்டும். விழாவுக்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்ய மோட்டாா் வாகன ஆய்வாளா்களை அதிகளவில் நியமிக்க வேண்டும், தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிா் காக்கும் ரப்பா் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரா்களை தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
மருத்துவா்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி அமைத்திடவும், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் தேவையான அளவு குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். அனைத்து உணவு விடுதிகளையும் ஆய்வு செய்து உணவின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் அ. டயானா சா்மிளா, வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ், நாகை கோட்டாட்சியா் கோ.அரங்கநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மூ. மாஹீன் அபுபக்கா், பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.