ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்கா தொடுத்துள்ள வா்த்தகப் போரின் காரணமாக, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.73,000 கோடிக்கு ஏற்றுமதியான ஆடை வகைகள் முடங்கிவிட்டன. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் திருப்பூா் பகுதியில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருள்களில் 30 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு 75,000 போ் வேலை இழக்கும் சூழல் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மட்டும் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் சென்னாக்கூனி இறால் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய தொழில்துறையினரும், தொழிலாளா்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயா்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5,000 உதவி வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.