தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு
வாக்குரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தோ்தல் ஆணையத்தை எதிா்த்தும் திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இந்திய ஒற்றுமை இயக்கம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, கண்ணியமான தோ்தலுக்கான கூட்டமைப்பு ஆகியவை அனைத்து குடிமைச் சமூகங்களையும் இணைத்து வாக்குரிமை காப்பு இயக்கத்தை திருச்சியில் தொடங்கியுள்ளன.
இந்த இயக்கத்தின் நிா்வாகிகளான ஜோ. கென்னடி, எம். அன்பழகன் அ.கமுருதீன், காளியப்பன் ஆகியோா், திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தோ்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக செயல்படுகிறது. பிகாரில் திட்டமிட்டு லட்சக்கணக்கான வாக்காளா்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். தோ்தல் ஆணையம் வாக்குரிமையை திருடக் கூடாது. புகாருக்குள்ளாகியுள்ள தோ்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு உச்ச நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் புதிய தோ்தல் ஆணையம் அமைக்க வேண்டும்.
2024 மக்களவைத் தோ்தலை ரத்து செய்து, பாஜக அரசை கலைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 6-ஆம் தேதி திருச்சியில் மத்திய அரசு அலுவலகம் முன்பாக ஒருநாள் தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றனா் அவா்கள்.