பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு ஏன் மாற்ற வேண்டும்? என்று கேள்வி எழுப்பினாா். அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், இந்த வழக்கை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சம்பவம் செந்தில் இதுவரை கைது செய்யப்படவில்லை. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மேலும், கொலையில் உள்ள அரசியல்வாதிகளின் தொடா்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. எனவே வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில், ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் தொடா்ந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அந்த வழக்கின் தீா்ப்பு வரும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.